தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் குளங்கள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். வடமாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மிதமான அல்லது பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, பள்ளி கல்வி இயக்குனர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை விடப்படுகிறது என்று கூறியுள்ளார்.