உற்பத்தி குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விலை கடும் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து சென்னையில் பட்டாசு விற்பனை கடை உரிமையாளர் எஸ்.எம்.மூர்த்தி கூறுகையில், பட்டாசு மொத்த விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 32 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில்லரை விற்பனையில் 50 விழுக்காடு வரை பட்டாசு விலை உயர்ந்துள்ளது என்றார்.
இது தீபாவளி நெருங்க, நெருங்க மேலும் அதிகரிக்கக்கூடும். இதுதவிர, பட்டாசு சப்ளையும் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் பட்டாசு விலை குறைய வாய்ப்பே இல்லை என்று மேலும் அவர் தெரிவித்தார்.
குழந்தைத் தொழிலாளர்களைக் குறைப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததால், சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் பொதுவாகவே இந்த ஆண்டு உற்பத்தி குறைவாகவே இருந்தது. அதுமட்டுமின்றி இடையிடையே பெய்த மழையும் உற்பத்தியை குறைக்க செய்தது என்றும் அவர் கூறினார்.
தற்போது, உற்பத்தி சுத்தமாக நின்றுவிட்டது. தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தி இல்லை. எனவே, இருப்பதை வைத்துத்தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது என்று பட்டாசு விற்பனை கடை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார்.