கிட்னி மோசடியை தடுக்க உடல் உறுப்பு தான சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வர இருக்கிறேன் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறினார்.
இந்தியாவில் உள்ள குழந்தைகள் தங்களது பெற்றோர்களின் உடன் பிறந்தோர், உறவினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது. இது வெட்க கேடானது. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டார்.
கிட்னி மோசடி தொடர்பாக தமிழக அரசு கடந்த ஒரு ஆண்டா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகிறது. இதனை தடுப்பதற்கென தற்போதுள்ள உடல் உறுப்பு தான சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்ட திருத்த மசோதாவை வருகிற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வர இருக்கிறேன் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் உடல் உறுப்புகள், சேமிப்பு வங்கிகள் சென்னை, அகமதாபாத், கவுகாத்தி, பெங்களூர், போபால், லக்னோ, ஐதராபாத் உள்பட 10 இடங்களில் தொடங்கப்பட உள்ளது. இன்னும் 3 மாதங்களில் இவை செயல்பட தொடங்கும் என்றார் அன்புமணி.
கிராம புறத்தில் மருத்துவ மாணவர்கள் 1 ஆண்டு கட்டாய சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் குறித்து மருத்துவர் சாம்பசிவ ராவ் தலைமையிலான குழு மருத்துவ மாணவர்கள், பொது மக்கள், மருத்துவர்களின் கருத்துகளை கேட்டு வருகின்றனர். அவர்கள் அறிக்கையின் படி சட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.