அரசுப்பள்ளியில் முதலாம் வகுப்பில் சிறுமியை சேர்க்க ஜாதிச் சான்றிதழ் தேவையில்லை என்று உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா வளையச் செட்டியூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில் இவரது மகள் சுஷ்மிதாவை முதலாம் வகுப்பில் சேர்க்கச் சென்றார்.
விண்ணப்பத்தில் தனது மகள் கொண்டாரெட்டி ஜாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார். இதற்கான ஜாதிச் சான்றிதழை கொடுத்தால்தான் சுஷ்மிதாவை பள்ளியில் சேர்த்துக் கொள்வோம் என்று பள்ளித் தலைமை ஆசிரியர் கூறினார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சுப்பிரமணி. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர்.
பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஜாதி சான்றிதழ் தேவையில்லை என்று 1.4.1999ல் வருவாய்த்துறை செயலாளரே ஆணை வெளியிட் டுள்ளார் என்று மனுதாரரின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.
இதை கேட்ட நீதிபதிகள், ஜாதி சான்றிதழ் இல்லாமல், சுப்பிரமணியின் மகள் முதலாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு பள்ளி முதல்வருக்கு உத்தரவிட்டனர்.