வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து கடலோர மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக ஆங்காங்கே மக்கள் பாதிக்கப்பட்டுள்ள விவரங்கள் அரசு கவனத்துக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவுபடுத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், மழை வெள்ளம் காரணமாக மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் ஏற்பட்டு சேத விவரங்களை மதிப்பிட்டு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், உடனடியாக மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை வழங்குமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் பார்வையிடும் மாவட்டங்கள் விவரம் வருமாறு:
தஞ்சாவூர் - கோ.சி.மணி, எஸ்.என்.எம்.உபயதுல்லா, விழுப்புரம் - பொன்முடி, கடலூர் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கோவை - பொங்கலூர் பழனிச்சாமி, காஞ்சிபுரம் - தா.மோ.அன்பரசன், கன்னியாகுமரி - என்.சுரேஷ் ராஜன், ராமநாதபுரம் - சுப.தங்க வேலன், ஈரோடு -என்.கே.கே.பி.ராஜா, நெல்லை - பூங்கோதை, தூத்துக்குடி - கீதா ஜீவன், திருவள்ளூர் - கே.பி.பி.சாமி, திருவாரூர், நாகப்பட்டினம் - மதிவாணன்