''சேது சமுத்திர திட்டபணிகளில் போலி வாதங்களை முன் வைத்து தொடர்ந்து உண்மையை டி.ஆர்.பாலு மூடி மறைத்து வருகிறார்'' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் 70 விழுக்காடு பணிகள் முடிந்து விட்டதாக உண்மைக்கு மாறான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அப்படி என்றால் இதுவரை தோண்டிய கால்வாயின் மொத்த நீளம் எவ்வளவு? ஆழம் எவ்வளவு? பணிகள் நிறைவேற்றப்பட்ட 70 விழுக்காடு கால்வாயில் கப்பலை ஓட்டிக்காட்டத் தயாரா? என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலு நிறைவேற்ற முடியாத ஒரு திட்டத்தை ஒரு வருடத்தில் நிறைவேற்றப் போகிறோம் என்று குரல் கொடுப்பது மக்களை ஏமாற்றுவதாகவே இருக்கிறது. உண்மை நிலையை தெரிந்து கொண்டு வேண்டுமென்றே மக்களை ஏமாற்றுகிறாரா? அல்லது உண்மை நிலை அவருக்கு தெரிந்தும் பேசுகிறாரா? என ஜெயலலிதா கேட்டுள்ளார்.
150 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டிய இந்த திட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டால் பொருளாதார ரீதியாக அது தமிழகத்திற்கு பயனிக்குமா? அதிக எடை கொண்ட நவீன கப்பல்கள் சேது சமுத்திர கால்வாய் வழியாக செல்வதற்கு சாத்தியம் உண்டா? என்பதைப் பற்றி எல்லாம் துளி கூட யோகிக்காமல், சுல லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு திரும்பத் திரும்ப மக்களை குழப்பி தவறான உண்மைக்கு மாறான, போலி வாதங்களை முன் வைத்து தொடர்ந்து உண்மையை மூடி மறைக்கும் செயலில் ஈடுபடும் டி.ஆர்.பாலு செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.