சேது சமுத்திர திட்டப் பணிகளை பிரதமர் என்று தொடங்கி வைத்தாரோ அதிலிருந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த காரணத்தைக் கொண்டும் இந்த திட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உறுதிபடக் கூறினார்.
மத்தியில் நடைபெறும் ஆட்சி நிறைவேற்றும் தேசிய திட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். அவர்கள் எண்ணம் பலிக்காது. நீதிமன்ற உத்தரவுப்படி குறிப்பிட்ட இடத்தில் தற்காலிகமாக சேது கால்வாய் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்காவிட்டால் குறிப்பிட்ட காலத்துக்குள் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டுவிடும் என அமைச்சர் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்திற்கு முன்பு இதை முடிக்க முயற்சி செய்வோம். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டம் என்பதால் பணத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஜெயலலிதாவின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியாகாந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தொடங்கி வைத்த இந்த திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்றார் அமைச்சர் டி.ஆர்.பாலு.
எண்ணூர் துறைமுகத்தில் 14 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது ரூ. 6,466 கோடி செலவில் நிறைவேற்றப்படும். சென்னை துறைமுகத்தில் 14 திட்டங்கள் ரூ. 2,247 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 24 திட்டங்கள் ரூ. 4,571 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று டி.ஆர்.பாலு கூறினார்.
தமிழ்நாட்டில் அமைக்கப்படும் புதிய சாலைகள் அனைத்தும் 2008-க்குள் முடிக்கப்படும். மொத்தம் 80 பைபாஸ் சாலைகள், 303 மேம்பாலங்கள், 66 பெரிய பாலங்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர் டி.ஆர்.பாலு, சென்னை கத்திபாரா மேம்பாலம் வரும் மார்ச் மாதம் செயல்படும் என்றார்.