சென்னையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
வங்கக்கடலில் இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே மையம் கொண்டிருந்த குறைந்தழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலுக்கு சென்றுவிட்டது. அதனால் மழைஅளவு இதுவரை பெய்ததைவிட சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே பலத்தமழை முதல் மிக பலத்தமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்தமழை பெய்யும்.
சென்னையில் இன்று ஒன்று அல்லது இருமுறை மழை அல்லது இடியுடன் கூடியமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
சென்னையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் ஓடியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.