முதலமைச்சர் கருணாநிதியை தரக்குறைவாகத் தாக்கி பேசியதாக ம.தி.மு.க. கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் நேற்றிரவு ம.தி.மு.க. பொதுக் கூட்டம் நடந்தது. இதில் மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
இரவு 10.30 மணிக்கு நாஞ்சில் சம்பத் பேசி கொண்டிருந்த போது, சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கூட்டத்துக்குள் புகுந்து சரமாரியாக கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
இதை பார்த்து பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த அவைத் தலைவர் அருள்சாமி, நாஞ்சில் சம்பத், மாவட்ட செயலாளர் செல்வராகவன் உள்பட 10 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே முதலமைச்சர் கருணாநிதியையும், திமுக அமைச்சர்களையும் பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக கூறி, தி.மு.க. பிரமுகர் கணேசன் என்பவர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திண்டுக்கல் லாட்ஜில் தங்கியிருந்த நாஞ்சில் சம்பத்தை இன்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத், மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.
நாஞ்சில்சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147 (கூட்டமாக கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506(2) (கொலை மிரட்டல்) உள்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.