லாரி நிறுத்தம்-நாமக்கல்லில் முட்டை தேக்கம்
-எமது ஈரோடு செய்தியாளர்
கேரளா மாநிலத்தில் தொடர்ந்து நீடிக்கும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் ஒரு கோடி முட்டை தேக்கமடைந்துள்ளன.
கேரளா மாநிலத்தில் ஓட்டுநர், உதவியாளர் செலுத்தும் சேமநல நிதியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 18ம்தேதி முதல் அம்மாநில லாரி உரிமையாளர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் முட்டை, அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து நாள்தோறும் 50 லட்சம் முட்டைகள் கேராளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. தற்போது லாரிகள் வேலைநிறுத்தம் நடப்பதால் மூன்று நாட்களாக முட்டை அனுப்பும் பணி தடைபட்டுள்ளது. நாமக்கல்லில் மட்டும் தினமும் 40 லட்சம் முட்டைகள் தேங்கி வருகின்றன. வட மாநிலங்களுக்கு அனுப்பவும் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்.
கேரளாவுக்கு அனுப்ப வேண்டிய ஒரு கோடிக்கும் அதிகமான முட்டைகள் நாமக்கல் பண்ணைகளில் தேக்கமடைந்துள்ளன.