சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலத்தை அகற்றாமல் நிறைவேற்ற முடியுமா என்பதை பரிசீலிக்க மத்திய அரசு அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கடலை ஆழப்படுத்தும் போது, ராமர் பாலம் என்று அழைக்கப்படும் ஆடம் பாலத்தின் குறிப்பிட்ட பகுதியை ஆழப்படுத்த வேண்டியதுள்ளது.
இந்த பாலத்தை இலங்கையின் மன்னன் ராவணன், ராமரின் மனைவி சீதையை சிறைபிடித்து சென்றதால், அவரை மீட்க வானர படைகளுடன் ராமர் கட்டிய பாலம் தான் பாக் ஜலசந்தியில் உள்ள ராமர் பாலம் என்று இந்துக்கள் நம்புகின்றனர். எனவே சேது சமுத்திர திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்தும் போது, ராமர் பாலம் அகற்றப்பட அனுமதிக்கக் கூடாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்று ஆலோசிக்கும் படி மத்திய அரசிடம் கூறியது.
இதனடிப்படையில் மத்திய அரசு பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி முன்பு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோரை கொண்ட அமர்வு நீதி மன்றத்தின் முன் இம்மனு விசாரணைக்கு வந்தது..
சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவில் மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழுவில் உள்ளவர்கள் ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானவர்கள். இந்த குழுவின் தலைவரான பேராசிரியர் ராமச்சந்திரன் ஏற்கனவே பகிரங்கமாக ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது.. இது மனிதர்களால் கட்டப்பட்டது அல்ல என்று கூறியுள்ளார். மற்ற உறுப்பினர்களில் எஸ். ஆர். வாட்டி இந்த திட்ட குழுவின் துணை இயக்குநராக இருந்து, சேது கால்வாய் திட்டத்திற்கு அனுமதி வழங்கியவர். மற்றொரு உறுப்பினரான எஸ். ஆர். சர்மா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே ஹிந்துக்கள் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட சீதையை மீட்க ராமர் ஹனுமனின் வானரப்படைகளால் அமைக்கப்பட்ட பாலம் என்பது முட்டாள் தனமானது என்று கூறியுள்ளவர் என்று அம்மனுவில்
சுப்ரமணிய சாமி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நிபுணர் குழுவை அமைத்து மத்திய அரசு, அதில் நாங்கள் தலையிட முடியாது. அந்த குழுவின் அறிக்கை முதலில் வரட்டும். பிறகு அந்த அறிக்கை தவறானதா, இல்லையா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று கூறி சுப்ரமணிய சாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.