தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் பொறுப்பிலிருந்த அமைச்சகங்கள் மாற்றப்பட்டுள்ளன!
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவரிடம் இருந்த அந்தத் துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் பிற்பட்டோர் நலன், மிகவும் பிற்பட்டோர் நலன், சீர்மரபினர் நலன், அயல்நாடு வாழ் இந்தியர்கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் நலன் ஆகிய துறைகளை கவனிப்பார்.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இத்துறை எம்ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இவர் சுகாதாரம், மருத்துவக்கல்வி, குடும்பநலன் ஆகிய துறைகளை கவனிப்பார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம் இருந்த பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் ஆகிய துறைகள் சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இனி இவர் சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
முதலமைச்சர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் பர்னாலா, தமிழக அமைச்சரைவையில் இலாகாக்களை மாற்றம் செய்துள்ளார்.
சமீபத்தில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் விஷ காய்ச்சல் காரணமாக இறந்தார். மேலும் 7 பேர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கு மருத்துவமனை, விடுதிகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் கொசுக்கள், விஷ பூச்சிக்கள் உற்பத்தியானது. இதன் காரணமாகவே விஷக் காய்ச்சல் பரவியது. அரசின் அலட்சியப் போக்கினால் ஒரு உயிர் பறிபோனது என்று மாணவ- மாணவிகள் குற்றம்சாற்றினர். இதன் காரணமாகவே ராமச்சந்திரன் பதவி பறிக்கப்பட்டதாக தெரிகிறது.