கடந்த 1998ம் ஆண்டு கோவையில் 58 பேரின் உயிரை பலிவாங்கிய தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள பாட்ஷா உள்ளிட்ட 70 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி கோவை நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி பா.ஜ.க. தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்தபோது தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
இந்த குண்டு வெடிப்பில் 58 பேர் பலியாயினர். இந்த தொடர்பான வழக்கில் கொலை முயற்சி, வெடி குண்டுகள் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 88 பேருக்கு 21 மாதம் முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியது மற்றும் கொலை செய்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக அல் உம்மா தலைவர் எஸ். ஏ. பாட்ஷா உட்பட 70 பேர் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கோவை நீதிமன்ற நீதிபதி கே. உத்திராபதி இன்று தண்டனை அறிவிக்க உள்ளார்.
இதையொட்டி கோவை நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.