கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்கியதை போல நெல்லுக்கும் குவிண்டாலுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு 850 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி இருக்கின்ற அதே சமயத்தில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 620 ரூபாயில் இருந்து 645 ரூபாயாக மட்டுமே உயர்த்தி இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கை தென்னிந்திய விவசாயிகளுக்கு, குறிப்பாக, தமிழக விவசாயிகளுக்கும் எதிரான நடவடிக்கையாகும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
எனவே, கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு என்று தரப்படுகின்ற தொகையான 1,000 ரூபாய் வழங்கியதைப் போலவே, நெல்லுக்கும் குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாய் வழங்குவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விவசாய இடுபொருட்களின் விலை உயர்வால் நெல் விவசாயிகள் தத்தளித்து தடுமாறிப் போய் இருக்கிறார்கள். ஆகவே, நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையான 1,000 ரூபாயை உடனடியாக மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.