நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.1000 நிர்ணயம் செய்யக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து இதற்கான முயற்சிகளை அரசு எடுக்கும் என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சட்டசபையில் இன்று பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நெல்லின் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.1000மாக உயர்த்த கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதிக நெல் உற்பத்தி செய்யும் தஞ்சை, திருச்சி போன்ற மாவட்ட விவசாயிகளே தாங்கள் உற்பத்தி செய்யும் நெல் முழுவதையும் தமிழக அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கிறார்கள். 95 விழுக்காடு பேர் ரேஷன் கடை களில் விற்கப்படும் அரிசி கிலோ ரூ.2 என்பதால் வாங்குகிறார்கள் என்றார்.
கடந்த ஆண்டு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.650 என்று இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.675 ஆக மத்திய அரசு நிர்ணயித்தது. உடனே முதலமைச்சரின் அறிவுரைப்படி கடந்த 9ஆம் தேதி விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரை நேரில் சந்தித்து நெல் கொள்முதல் விலையை மேலும் உயர்த்துமாறு கேட்டுக் கொண்டேன் என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.
அதன்படி மத்திய அரசு குவிண்டாலுக்கு மேலும் 50 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ. 725 கிடைக்கும். என்றாலும் கோதுமை கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி முதல் குவிண்டாலுக்கு ரூ. 1000மாக அறிவித்து உள்ளது என அமைச்சர் கூறினார்.
எனவே முதலமைச்சர் கருணாநிதி கடந்த 17ஆம் தேதி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். நெல்லுக்கும் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.1000 நிர்ணயிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதற்கான முயற்சிகளை அரசு எடுக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு உறுதிபட கூறினார்.