தமிழகத்தில் மின்சாரம் தட்டுபாடின்றி வழங்குவதற்காக கூடுதலாக 4 ஆயிரம் டிரான்பார்மர்கள் வாங்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது பீட்டர் அல்போன்ஸ் (காங்.), இ.எஸ்.எஸ். ராமன் (காங்.), ஜி.கே. மணி (பா.ம.க.), கோவிந்தசாமி, ஜான் ஜோசப் (சி.பி.எம்.) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், தமிழகத்தில் மின்சாரம் வழங்குவதற்காக 10 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களுக்கு 200, 300 வீதம் அந்த டிரான்ஸ்பார்மர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர வாரியத்திடம் 500 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இது தவிர 4 ஆயிரம் புதிய டிரான்ஸ்பார்மர்கள் வாங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்றார்.
காற்றாலை மூலம் வரும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் அளவுக்கு குறைந்ததாலேயே சில இடங்களில் மின்தடை உள்ளது. இதனை சரிகட்ட மேற்கு வங்கத்திடமிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கி உபயோகப்படுத்தி வருகிறோம். இங்கு காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அந்தந்தப் பகுதிகளில் வினியோகிக்க துணை மின் நிலையங்களை உருவாக்கி வருகிறோம் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.