''பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட முடியாமல் குழப்பத்தில் உள்ள பா.ஜ.க., ஆளும் காங்கிரஸ் கட்சி பற்றி பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும்'' என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிதியமைச்சராக இருந்து இந்தியாவின் பொருளாதார புரட்சிக்கு வித்திட்டவர் மன்மோகன் சிங். தற்போது உலகமே வியந்து பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவரை பலவீனமான பிரதமர் என்றும், காங்கிரஸ் கட்சியிலேயே அவருக்கு ஆதரவு இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி செய்து வரும் விமர்சனங்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாகும் என கிருஷ்ணசாமி குற்றம்சாற்றியுள்ளார்.
கடந்த 1950ஆம் ஆண்டில் 54 மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி தற்போது 214 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி தற்போது 9.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த 1998 முதல் 2004 வரை பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போது வளர்ச்சி விகிதம் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட முடியாமல் குழப்பத்தில் உள்ள பா.ஜ.க., ஆளும் காங்கிரஸ் கட்சியை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.