ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி அருகே உள்ளது வடவள்ளி. இது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமமகும். இந்த கிராமத்தை சேர்ந்த கருப்பணன் என்பவரது தோட்டம் வனப்பகுதியின் எல்லையில் உள்ளது. இவர் தன் நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இந்த சோளம் தற்போது நன்கு விளைந்து நிற்கிறது. இந்த சோளப்பயிரை கடந்த ஒருவாரமாக வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வந்து தின்று சென்றுள்ளது.
இதை கண்ட கருப்பணன் தன் நிலத்தை சுற்றிலும் மின்சார வேலி அமைத்து நேற்று வியாழக்கிழமை இரவு மின்சார கம்பத்தில் இருந்து மின்சாரத்தை நேரடியாக எடுத்து மின்வேலிக்கு பாய்ச்சி உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் காட்டு யானை சோளப்பயிரை தேடி வந்துள்ளது.
நிலத்தின் அருகே வந்த காட்டு யானை மின்சார வேலியில் சிக்கி பிளிரிக்கொண்டு பரிதாபமாக உயிரைவிட்டது. சத்தம் கேட்டவுடன் பீதியடைந்த கருப்பணன் தலைமறைவாகிவிட்டார்.
தகவல் தெரிந்ததும் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி எஸ்.இராமசுப்பிரமணியம், ரேஞ்சர் எஸ்.கே.சுந்தரராஜன் ஆகியோர் சென்று காட்டு யானையின் பிரதேத்தை கைபற்றி அதில் இருந்த தந்தங்கள் இரண்டையும் பத்திரப்படுத்தினர். வனத்துறை மருத்துவர் மனோகரன் பிரதே பரிசோதனை செய்தார்.
இறந்த ஆண் யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் என மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். வனப்பகுதியின் ஓரத்தில் மின்சார வேலியில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சக் கூடாது, அதேபோல் வனப்பகுதியின் ஓரத்தில் இருக்கும் விவசாய நிலத்தில் கரும்பு, சோளம் போன்ற வனவிலங்குகள் விரும்பும் பயிர்களை நடவு செய்யவேண்டாம் என வனத்துறையினர் பல்வேறு விதங்களில் விவசாயிகளிடம் அறிவுருத்தியும் இதுபோன்ற சம்பவம் நடந்தது வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.