''நடுரோட்டில் பூசணிக்காயை உடைத்து அப்புறப்படுத்தவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆயுத பூஜை அன்று பூசணிக்காயை உடைத்து வழிபடுவது பாரம்பரிய வழக்கம். இருப்பினும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பூசணிக்காய்களை உடைக்க வேண்டும். சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது என்றார்.
எனவே பூசணிக்காய்களை சாலைகளில் உடைக்கக்கூடாது. அப்படியே உடைத்தாலும் உடனடியாக அவற்றை அப்புறப் படுத்த வேண்டும். அப்புறப்படுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நாஞ்சில் குமரன் கூறினார்.
அதிமுக உறுப்பினர்கள், ஜெயலலிதா வீட்டில் மர்ம நபர் புகுந்த தொடர்பான புகார் மனு பரிசீலனையில் உள்ளது என்று காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.