அடுத்த மாதம் கோவாவில் நடைபெற உள்ள உலக திரைப்பட விழாவுக்கு 'பெரியார்' படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், பெரியார் திரைப்படத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலக திரைப்பட விழாவுக்கு 2 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று பெரியார் படம் என்றார்.
இந்த படத்தை இந்தியில் டப்பிங் செய்து வட மாநிலங்களில் திரையிட முடிவு செய்துள்ளோம். உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி மாயாவதி லக்னோ பல்கலைக்கழகத்தில் பெரியார் சிலை வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். அந்த சிலை திறப்புவிழாவில், இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட பெரியார் படம் திரையிடப்படும் என்று கி.வீரமணி கூறினார்.
நடிகர் சத்யராஜ் கூறுகையில், பெரியார் வேடம் ஒரு சவாலான பாத்திரம். பெரியார் வேடம் நடிகர் திலகம் சிவாஜியின் லட்சிய பாத்திரமாகவும் இருந்தது என்றார்.
இயக்குனர் ஞான ராஜசேகரன் கூறுகையில், வித்தியாசமான கதை அம்சம் கொண்ட 21 படங்கள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் உலக திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்படும். இந்த ஆண்டு 119 படங்கள் போட்டியிட்டன. இதில் தமிழில் பெரியார் படமும், அம்முவாகிய நான் என்ற படமும் தேர்வுசெய்யப்பட்டு உள்ளன. இந்த படங்கள் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் உலக திரைப்பட விழாக்களில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ படமாக திரையிடப்படும்'' என்றார்.