கூட்டுறவுச் சங்கங்களுக்கு நடைபெறும் தேர்தல்களில் அரசியல் பிரமுகர்களும், அவர்களின் குடும்பத்தினரும் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ் கூறியதாவது :
“சட்டமன்ற கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சமச்சீர் கல்விமுறை, விவசாயிகளின் பிரச்சனை, சிமெண்ட் விலைஉயர்வு, தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை விவாதிக்க வேண்டியுள்ளது. எனவே 10 நாட்களாவது சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த வேண்டும்.
தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது சரியானதே. ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தன்னை கொல்வதற்கு ஆள் அனுப்பி இருப்பதாக கூறியிருப்பது அவருடைய கற்பனை வளத்தை காட்டுகிறது. நீதிமன்றத்திற்கு அவர் செல்லவிருப்பதால் இது பற்றி மேலும் கருத்து கூற நான் விரும்பவில்லை.
கூட்டுறவு கொள்கைகளை அரசியல்வாதிகள் சீரழித்து விட்டனர். அரசியல் பிரமுகர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கும் வகையில் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்துத் தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது இத்தகைய கட்டடங்கள் மீது ஓராண்டுக்கு நடவடிக்கை இல்லை என்பதற்கான சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தேவையற்றது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசு நடக்க வேண்டும்.
இந்த கட்டடங்களை இடிப்பதற்கும், சென்னை நகரில் உள்ள குடிசைகளை மேம்படுத்துவதற்கும் தொடர்பு இல்லை. இரண்டிற்கும் முடிச்சு போடுவது சரியல்ல.
சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு புதிய கொள்கை முடிவை அறிவித்துள்ளது. இதற்கேற்ப மாநில அரசும் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். நியாயமான விலை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, நிலம் அளித்தவருக்கு மறுவாழ்வு திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த சட்டம் இருக்கவேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.