திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் சட்ட விரோதமாக மணல் அள்ள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி வட்டம் பிரிதிவி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் சுண்ணாம்புக் குளம், எறாலூர் பகுதிகளில் மணல் அள்ள 2001-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர எங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளிவருகின்றனர்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதிகமாக மணல் அள்ளுவதால் கடல்நீர் புகும் அபாயம் உள்ளது. வேளாண் நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குறிப்பிட்ட இடங்களில் மணல் அள்ளத் தடைவிதிக்க வேண்டும்.
இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, சுதந்திரம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், குறிப்பிட்ட இரண்டு கிராமங்களில் மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்தனர். வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.