செங்கல்பட்டு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் ஃபார்வார்டு பிளாக் கட்சி வல்லரசு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் உட்பட 2 பேர் இறந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள பெருநாளியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 52). இவர் தனது கட்சியின் நிர்வாகிகள் 5 பேருடன் முதல்வரைச் சந்திப்பதற்காக சென்னைக்குப் புறப்பட்டார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு செங்கல்பட்டு அருகில் உள்ள கொளம்பாக்கம் அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சிமெண்ட் ஏற்றிவந்த லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்தது.
அந்த லாரியை முந்த முயன்ற கார் எதிர்பாராமல் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ராஜபாண்டியன், சையத் இப்ராகிம் (60) ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்தனர்.
மேலும், செந்தூர பாண்டியன் (40), செல்வம் (47), கார் ஓட்டுநர் காளிமுத்து (19) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக செங்கல்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.