ஈரோடு அருகே விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை நிர்வாணமாக்கி, சங்கிலியால் கட்டி வைத்து தாக்கிய பெண் உதவி ஆய்வாளர் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் ஊதியூர் அருகே உள்ளது நிழலி கவுண்டம்பாளையம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் மற்றும் முத்துசாமி. இதே ஊரை சேர்ந்தவர் ராமசாமி. இவர்களுக்குள் வாய்க்கால் தகராறு ஏற்பட்டது.
இதில் செந்தில் மற்றும் முத்துசாமி இருவரும் சேர்ந்து ராமசாமியை தாக்கினர். இது குறித்து ராமசாமி ஊதியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். செந்தில் மற்றும் முத்துசாமியை ஊதியூர் உதவி ஆய்வாளர் நிர்மலா விசாரணைக்காக தேடிச் சென்றார்.
அவர்களது உறவினர்களான சென்னிமலை சொக்கநாதபாளையத்தை சேர்ந்த நந்தகுமார், அக்கரைபாளையத்தை சேர்ந்த முத்து (35) ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தார். விசாரணையின்போது இருவரையும் நிர்வாணமாக்கி சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளார். நந்தகுமாரின் பிறப்புறுப்பில் உதைத்தார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். தகவல் தெரிந்து கிராம மக்கள் ஊதியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
காங்கேயம் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் ஊதியூர் காவல்நிலையம் வந்தார். உதவி ஆய்வாளர் நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து, கிராம மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
உதவி ஆய்வாளர் தாக்கியதில் காயமடைந்த இருவரும் கடந்த 13ம் தேதி ஈரோடு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். மேலும் இருவரும் ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர். பெண் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.
மனுவை பெற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோனல்மிஸ்ரா உதவி ஆய்வாளர் நிர்மலாவை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்ற உத்திரவிட்டார்.