சென்னை மாநிலக் கல்லூரியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் அ.இ.அ.தி.மு.க.வின் 36ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. அதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்றார்.
அப்போது, நேற்று நடைபெற்ற அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் வடநாட்டு சாமியார்களை அணுகி சேது சமுத்திர திட்டப் பிரச்சனைகளின் சிக்கல்களை எடுத்துக் கூறி திட்டம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, '' இது பரிதாபமாக உள்ளது. இவ்வளவு வயதான ஒருவர், இத்தனை முறை முதல்வராக இருந்த ஒருவர் இந்த பிரச்சனைக்கு வேறு ஒருவரிடம் போய் சிபாரிசு கேட்பது வெட்கக்கேடானது. என்னை பொருத்தவரை இந்த திட்டம் கைவிடப்பட்டது என்று கருத இடம் உண்டு'' என்றார்.
மேலும். ''நேற்று முன்தினம் மாநில கல்லூரி வளாகத்தில் காவல்துறையினர் அத்துமீறி கல்லூரிக்குள் புகுந்து கடுமையாக மாணவர்களை தாக்கியுள்ளனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவர்களை தாக்கிய காவல் துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இது தொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்'' என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.