தமிழக சட்டப்பேரவையில் 4 அவசரச் சட்டங்களுக்கான புதிய சட்ட முன்வடிவுகள் இன்று அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழகச் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. காலை 9.30 மணிக்கு அவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேருக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 15 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும், அஇஅதிமுக உறுப்பினர்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் மர்ம ஆசாமி நுழைந்தது பற்றி உடனடியாக விவாதிக்க அனுமதிக்குமாறு கோரினர்.
அதுபற்றிக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார். மேலும், அந்த ஆள் ஒரு மனநோயாளி என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், விசாரணை முடிந்தவுடன் முழு விவரங்களும் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதை ஏற்குமாறு அவைத் தலைவர் ஆவுடையப்பன் கூறினார். ஆனால் அதை ஏற்காத அஇஅதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். மேலும், பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் அவைத் தலைவரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்த முயன்றனர்.
எனவே, அவர்களை அவையைவிட்டு வெளியேற்றும்படி அவைத் தலைவர் உத்தரவிட்டார். பின்னர் அஇஅதிமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதைக்கண்டித்து ம.தி.மு.க உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் (திருத்தம்) அவசரச் சட்ட முன்வடிவை அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அதிகாரி நியமனம்) 2-வது திருத்த அவசரச் சட்ட முன்வடிவை அமைச்சர் கோ.சி.மணியும் அறிமுகம் செய்தனர்.
மேலும், தமிழ்நாடு சட்ட தனிவகை முறைகள் (சிறப்பு விதிமுறைகள்) அவசரச் சட்டம், தமிழ்நாடு நகர், ஊர் அமைப்பு (திருத்தம்) அவசரச் சட்டம் ஆகிய 2 அவசர சட்டங்களுக்கான சட்ட முன்வடிவுகளை அமைச்சர் பரிதி இளம்வழுதி அறிமுகம் செய்தார். பின்னர் அவை நடவடிக்கைகள் நாளைவரை தள்ளிவைக்கப்பட்டது.