தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது நடப்புச் சட்டப்பேரவையின் 6-வது கூட்டத் தொடராகும்.
முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு துவக்கத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேருக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்படும். மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இக்கூட்டத்தொடரில், தமிழ்நாடு சட்ட தனிவகை முறைகள் (சிறப்பு விதிமுறைகள்) அவசரச் சட்டம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அதிகாரி நியமனம்) 2-வது திருத்த அவசரச் சட்டம், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் (திருத்தம்) அவசரச் சட்டம், தமிழ்நாடு நகர், ஊர் அமைப்பு (திருத்தம்) அவசரச் சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கான சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இவை தவிர, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் (தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடு) அவசரச் சட்டம் உள்ளிட்ட வேறு சில சட்டமுன்வடிவுகளும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அலுவல் ஆய்வுக் குழு கூடி, சட்டப்பேரவையின் மற்ற பணிகள் பற்றி முடிவு செய்யும். பேரவை நிகழ்ச்சிகள் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள சேது சமுத்திர திட்டம் குறித்து முதலமைச்சர் கருணாநிதி இந்த கூட்டத்தொடரில் விளக்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விவகாரத்தை எழுப்ப அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
பா.ம.க. தரப்பில் சமச்சீர் கல்வி திட்டம் பற்றிய அறிக்கையை சபையில் தாக்கல் செய்வது, மணல் கொள்ளை புகார், சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பிரச்சினை, என்.எல்.சி.க்கு 50 ஆண்டுகளுக்கு முன் நிலம் கொடுத்தவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு கொடுக்காதது என பல பிரச்சினைகளை எழுப்ப உள்ளனர்.