சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு முதுகெலும்பு போன்றவர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாணவ சமுதாயத்தின் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றாலே காவல் துறையின் அத்துமீறல் அதிகரிக்கும். மாணவர்களை பதம் பார்ப்பது அவருக்கு கைவந்த கலை. சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற ரகளையின் போது காவல் துறையினரே குண்டர்களை போல கற்களை எடுத்து மாணவர்களின் மீது தாக்கியது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். நடந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.