''இதிகாச புருஷர்களை முன்னிலை படுத்தி சேது சமுத்திர திட்டத்தை தடுப்பது நாட்டுக்கு நல்லதல்ல'' என்று இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் என்.வரதராஜன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
சென்னையில் இன்று அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு 60 விழுக்காடு பணிகள் முடிந்த பிறகு ராமர் பாலம் பிரச்சினையை கிளப்பி இந்த திட்டத்தை தடுப்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். மத நம்பிக்கை என்பது ஒவ்வொருவது உரிமை. இதிகாச புருஷர்களை முன்னிலை படுத்தி நல்ல திட்டங்களை தடுப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றனர்.
சேது சமுத்திர திட்டத்தை இப்போதைய வழியில் நிறைவேற்றுவதே சிறந்தது. ஆனால் மத்திய அரசு புதிய பாதை பற்றி யோசிக்க உச்ச நீதிமன்றத்தில் 3 மாத அவகாசம் வாங்கியிருப்பது தேவையில்லை. மத்திய அரசு உறுதியாக இருந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சேதுக்கால்வாய் வழியாக சிறிய கப்பல்கள்தான் போக முடியும் என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். முதலில் சிறிய கப்பல்கள் செல்லட்டும். அவர் ஆட்சிக்கு வந்து பிரதமராகி ஆழப்படுத்தி வேண்டு மானால் பெரிய கப்பலை விடட்டும் என இருவரும் தெரிவித்தனர்.
இன்னும் கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை உள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிலும், தனியார் கோவில்களிலும் தலித்துக்கள் சென்று வழிபட முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தா.பாண்டினும், வரதராஜனும் கேட்டுக் கொண்டனர்.