விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக எங்கள் மீது மத்திய உளவுத்துறையினர் பொய்த் தகவல்களை பரப்பி தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு அளிப்பதைத் தவிர, வேறு எந்தவித சட்டவிரோத நடவடிக்கையிலும் எங்கள் கட்சி ஈடுபடவில்லை; ஈடுபடவும் செய்யாது. வெகுஜன தொடர்பு கொண்ட இயக்கத்துடன் ரகசியத்தைக் கட்டிக் காக்கும் விடுதலை இயக்கங்கள் ஒரு போதும் தொடர்பு வைத்துக் கொள்ளாது; எந்த உதவியையும் நாடாது என்றார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளருடன் தொடர்பு வைத்திருந்ததாக யூகத்தின் அடிப்படையில் எங்கள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு மீது "க்யூ' பிரிவு காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளார்களே தவிர, அவர் சட்ட விரோத கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்தார்.
வன்னியரசுக்கு வந்ததாக கூறப்படும் பொருளை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரிடமும் காட்டவில்லை; ஊடகத்திற்கும் காண்பிக்கவில்லை. தவறான தகவல் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றதாக கூறுவதும் தவறு என்று திருமாவளவன் கூறினார்.
மத்திய உளவுத்துறையிலுள்ள மதவாத உணர்வு கொண்ட அதிகாரிகள் திட்டமிட்டு எங்கள் இயக்கத்தின் மீது பொய்யான தகவல் பரப்பி வருகிறார்கள். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என குற்றம் சாற்றினார் திருமாவளவன்.
ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் சேகரித்த உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சல்தலையை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொல். திருமாவளவன் கூறினார்.