கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறு குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கு இன்று 5 முதல் 9 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதித்து தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 குற்றவாளிகளுக்கு வரும் 18ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 168 பேரைச் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 158 பேர் குற்றவாளிகள் என கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர்களில் 88 பேருக்கு எதிராக சிறு குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 70 பேருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் என்பது உள்ளிட்ட பெரிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதில் ரியாஸ் உர் ரகுமான் அப்ரூவராக மாறிவிட்டார். மற்றோரு குற்றவாளி முகமது தஸ்தாகிர் நீதிமன்றக் காவலில் இறந்து விட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்திராபதி கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தண்டனை விவரங்களை அறிவித்து வருகிறார். முதல் கட்டமாக 88 பேருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 76 பேருக்கு அவர்களுடைய குற்றத்திற்குத் தகுந்தவாறு 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
மீதமுள்ள 12 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும் என தனிநீதிமன்றம் கூறியிருந்தது.
அதன்படி இன்று , முகமது பிலால், ஷாஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், ஆட்டோ நசீர், முகமது ரபீக், மீன்குலாம், சம்சுதீன், சந்திப் அகமது ஆகிய 9 பேருக்கு, குற்றத்திற்குத் தகுந்தவாறு 5 முதல் 9 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், குற்றவாளிகள் ஏற்கெனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலத்தில் கழித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி 9 பேரும் விடுதலையாகின்றனர்.
சிறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட வகையில், அபுதாகீர், கிச்சன் புகாரி, சித்திக் அலி ஆகிய 3 பேருக்கு இன்னும் தண்டனை அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இவர்களுக்கு வரும் 18ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று நீதிபதி உத்ராபதி கூறியுள்ளார்.
சதித்திட்டம் தீட்டுதல் போன்ற பெரிய குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்ட அல் உமா இயக்கத்தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி போன்ற 70 பேருக்கான தண்டனை விவரம் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும்.