மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
மத்தியில் நமது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு அமைந்து மூன்றாண்டு நிறைவுறுகிற நேரத்தில், தெளிந்த நீரோடையாக விளங்கிடும் இந்த ஆட்சியின் சாதனைகள், செயல்பாடுகள், திட்டங்கள் இவை அனைத்தும் அடித்தட்டு மக்களுக்கு சேதாரமின்றி போய்ச்சேருகிற ஒரு நிலை இருக்கும் இந்த சூழலில் குளத்தில் விழுந்த ஒரு கல்லைக் காட்டி, குளமே குழம்பி விட்டது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இனி வற்றிப்போகும், வறண்டு போகும் என்று குதிக்கின்ற சிலரைப் போல சுயநலம் பேணும் சில கட்சிகள் சமுதாயத்தை சீரழிக்கும் சில சக்திகள், சமத்துவத்தைக் குலைக்க முனையும் சில கும்பல்கள், ஆர்ப்பாட்டப் போர் பாட்டுப்பாடி ஆகா, வந்துவிட்டது அடுத்த தேர்தல்; வரப்போகிறது நமது கழுத்துக்கு மாலை என்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த நிலையில் மக்கள் அனைவரும் மகிழத்தக்க ஒரு முடிவு மத்தியில் உள்ளவர்களால் எடுக்கப்பட்டு, இந்த விளைவுக்கான பாராட்டுக்கும், புகழுக்கும் உரியவர்களாக சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் விளங்குகிறார்கள் என்பதை இந்தியச் சரித்திரத்தின் இந்தக் காலக்கட்டம் அழுத்தமாகவே பதிவு செய்யும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தீப் பற்றுமோ, தீமை எதுவும் விளையுமோ, தேச சக்தி சிதறுமோ என்ற திகைப்பான நினைப்பிலே இருந்து விடுபடக்கூடிய வினையாற்றியோர் அனைவரும் நன்றிக்குரியோர் ஆவர். இந்தியாவை ஆளுகிற அணிக்கு மாத்திரமல்ல, இதுவரை துணை நின்று இனியும் துணை நிற்க தோள் கொடுத்திடும் இடதுசாரி அணிக்கும் நன்றி உணர்வோடு நாடு தெரிவிக்கின்ற பாராட்டு மெத்தவும் பொருந்தும் என முதல்வர் கருணாநிதி பெருமைபட கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நமக்கும் பொறுப்புணர்வும் பங்கும் இருக்கின்ற காரணத்தால் இந்த நல்ல முடிவினை எய்திட நம்முடைய பங்கையும் செலுத்தினோம் என்கின்ற பெருமிதம் நமக்கும் உண்டு என்பதை அடக்கத்தோடு உணர்த்தக் கடமை பட்டிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இடையில் எழுந்த பிரச்சனை குறித்து மத்திய அரசின் வழி காட்டும் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் நான் எழுதிய கடிதங்கள், அவர்கள் எனக்கு எழுதிய பதில்கள், இடதுசாரி கட்சிகளின் சார்பாக பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன், எச்.ராஜா மத்தியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி, மாநிலத்திற்குள் உள்ள இடது சாரி கட்சிகளின் தலைவர்களுடனும், நமது நாடாளுமன்ற கட்சி முன்னோடிகளுடனும் கலந்து உரையாடிய நிகழ்வுகள் இவைகள் எல்லாம் இந்த முடிவை எய்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தன என்பதையும் எண்ணிப் பார்த்து மகிழ்கிறேன் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மதவாத சக்திகளும், பிற்போக்கு சக்திகளும் இனி அடங்கி ஒடுங்கி விடும் என்று அவசரக் கணக்கு போடாமல், இனி மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து அத்தகைய சக்திகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்ள நாம் விழிப்புணர்வுடன் இருப்போமாக என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.