சத்தி அருகே சாலையை சீரமைத்த பொதுமக்கள்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் சொசைட்டி ரோட்டை பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் சீர்செய்தனர்.
ஈரோடு அருகே குண்டும், குழியுமாக இருந்த சாலையை பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் சீர்செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோபி சாலையில் உள்ளது அரியப்பம்பாளையம். இங்குள்ள புளியம்பட்டி பிரிவில் இருந்து கிழக்கே செல்லும் சொசைட்டி சாலை சுமார் இரண்டு கி.மீ., தூரம் சென்று கரட்டூர் சாலையில் இணைகிறது. இந்த இரண்டு கி.மீ., தூரமுள்ள சாலை கடந்த பத்து ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்து வந்தது.
இந்த சாலையை சீர்செய்யகோரி பத்து வருடங்களாக பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வைத்தும் எவ்வித பயனும் இல்லை. ஆகவே இந்த சாலையை இப்பகுதி மக்களே தங்கள் சொந்த செலவில் சீர்செய்வது என முடிவுசெய்தனர்.
இதன்படி இப்பகுதியில் இருக்கும் சுமார் நாற்பது குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த அளவு தொகை கொடுத்தனர். இந்த தொகை மூலம் டிராக்டர் மூலம் மண் எடுத்துவந்து குண்டும், குழியுமாக இருந்த சாலைற்கு கொட்டினார்கள். கொட்டிய மண்ணை இப்பகுதில் உள்ள கூலி தொழிலாளிகள் இலவசமாக சாலைக்கு சமம் செய்தனர். இதனால் குண்டும், குழியுமாக இருந்த ரோடு ஓரளவு சீரானது.
அரசாங்கம் அறிவித்துள்ள நமக்குநாமே திட்டத்தில்கூட ஒரு பங்கு பொதுமக்கள் பணம் செலுத்தினால் மூன்று பங்கு அரசு செலுத்தும். ஆனால் இப்பகுதி மக்கள் இந்த சொசைட்டி சாலையை எங்களுக்கு நாங்களே என்ற திட்டத்தில் சீர்செய்ததாக கூறினார்கள்.