தமிழகத்தில் முதன்முறையாக அடுக்குமாடி கல்லறைகள் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் வரும் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது.
இறந்த கிறிஸ்தவர்களின் உடலை புதைப்பதற்காக சென்னை கல்லறை தோட்ட அமைப்பின் (எம்.சி.பி.) சார்பில் கீழ்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், காசிமேடு என்ற 3 கல்லறை தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு ஐந்து முதல் ஆறு உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதிய கல்லறைகள் அமைக்க இடமில்லாததால் 2 ஆண்டுக்கு முன்பு மூடப்பட்டது. அங்கு இடம் பதிவு செய்தவர்கள் உடல்களும் அல்லது ஏற்கனவே உள்ள கல்லறை மேல் ஒரு அடுக்கு அமைத்து அதில் உடல்களும் புதைக்கப்படுகிறது. மேலும் மாநகராட்சி விதிப்படி, 14 ஆண்டு நிறைவு பெற்ற கல்லறையை மீண்டும் தோண்டி அதில் புதிய உடலை புதைப்பது பல ஆண்டுகளாக இந்து வருகிறது.
தற்போது உடலை புதைப்பதற்கு இடமில்லாததால் புதிய ரக கல்லறைகளை அமைக்க எம்.சி.பி. திட்டமிட்டது. அதன்படி, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் 5 அடுக்குகளைக் கொண்ட 3 பிளாக் அடுக்குமாடிக் கல்லறைகளை எம்.சி.பி. கட்டியுள்ளது.
அதன்படி, பிளாக் ஒன்றில் 150 கல்லறைகள் வீதம் (ஒரு கல்லறையின் நீளம் 8 அடி, அகலம் மற்றும் உயரம் 2 அடி) ஆயிரம் சதுரஅடி நிலப்பரப்பில் 450 அடுக்கு மாடிக் கல்லறைகள் கட்டப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக இந்த மாதிரி கல்லறைகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடுக்குமாடி கல்லறைகள் 15ஆம் தேதி திறந்து வைக்கப்படுகின்றன.
3 ஆண்டுக்கு பின்னர் எலும்புகள் அங்குள்ள கிணற்றுக்குள் போட்டு விடுவார்கள். அதன் பின்னர் அடுத்த உடலை அதே கல்லறையில் வைக்கலாம். இப்படி ஒரு கல்லறை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து கொண்டே இருக்கும்.
இதுதவிர இந்த 3 பிளாக்குகளின் மேல் மேலும் தலா 2 பிளாக்குகளை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, 5 ஆயிரம் சதுரஅடி நிலப்பரப்பில் 1,350 கல்லறைகள் அமைந்து விடும். அதன் பின்னர் உடலை மேலே ஏற்றுவதற்கு லிப்ட் போன்ற வசதிகள் செய்யப்படும். அடுக்குமாடி கல்லறைகளுக்கு எண்கள் தரப்படும். அதன் அருகே உள்ள சுவரில் கல்லறையின் எண் மற்றும் அதில் வைக்கப்பட்டுள்ள நபரின் பெயர் எழுதப்படும். அதைப் பார்த்து, கல்லறைத் திருநாளில் வழிபாடு செய்யலாம்.