சுனாமி பாதித்த பகுதிகளில் வாழும் மீனவர்களுக்கு ரூ.120 கோடியே 35 லட்சம் மதிப்பிலான கூடுதல் நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரத்து 794 மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கூடுதல் நிவாரணமாக ரூ.110 கோடியே 36 லட்சம் மதிப்பிலான கனரக மிதி வண்டிகள், உயிர் காக்கும் கவச உடைகள், குளிரூட்டும் ஐஸ் பெட்டிகள், கை விளக்குகள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
மேலும் 591 மீனவ கிராம இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.59 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு விளையாட்டு சாதனங்களை அந்தந்த பகுதி மீனவ கிராம தலைவர்களிடம் முதல்வர் வழங்கினார்.
மீனவர்களுக்கு கடல் பகுதியில் எதிர்பாராத வகையில் உடல் நலக்குறைவோ, விபத்தோ ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க ரூ.9 கோடியே 40 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகளுடன் கூடிய முதலு தவிப் பெட்டிகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார். மீனவர்களின் நிவாரண உதவியாக ரூ.120 கோடியே 35 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.பி.பி.சாமி, அரசு தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி, நிதித்துறை செயலர் ஞானதேசிகன், மீன்வளத் துறை செயலர் லீனா நாயர் ஆகியோர் உடனிருந்தனர்.