''பிரசாந்த் தாக்கல் செய்த விவாக ரத்து வழக்கில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது’’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பிரசாந்தும், அவரது மனைவி கிரகலட்சுமியும் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து கேட்டு பிரசாந்த் தொடர்ந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஏற்கனவே நாராயண வேணு பிரசாத் என்பவரை கிரகலட்சுமி திருமணம் செய்ததை மறைத்துவிட்டு என்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக கூறி கிரகலட்சுமி, அவரது தந்தை தனசேகரன், தாயார் சிவகாம சுந்திரி, சகோதரர்கள் பொன்குமார், டாக்டர் ரங்கபாஷ்யம் உள்பட 8 பேர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிரசாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ரத்து செய்யக் கோரி கிரக லட்சுமியும் அவரது குடும்பத்தாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயபால் விசாரித்து வந்தார். இந்த வழக்கிற்கு பிரசாந்த் அளித்த பதில் மனுவில், "கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர். அதை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்திருக்கிறார். வரதட்சணை புகார் கொடுப்போம் என்றும் ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றும் என்னை மிரட்டினார்'' என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி ஜெயபால் இன்று அளித்த தீர்ப்பில், கிரகலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. கிரகலட்சுமி அவரது குடும்பத்தினர் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறினார்.
பிரசாந்த தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று டாக்டர் ரங்கபாஷ்யம் தாக்கல் செய்த மனுவை ஏற்பதாக நீதிபதி அறிவித்தார்.