நவராத்திரி, தீபாவளி பண்டிகை, கிறிஸ்மஸ் ஆகிய பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் நிரம்பிவிட்டன. எனினும், முன்பதிவு மையங்களில் தினமும் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள் எண்ணிக்கையும் குறையவில்லை.
நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகால காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் கடந்த 20 நாள்களுக்கு முன்னரே நிரம்பிவிட்டன.
இதையடுத்து, நெரிசலைச் சமாளிக்கும் வகையில் சென்னையில் இருந்து மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு 350-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை-மதுரை (0631, 0632), சென்னை- தூத்துக்குடி (0615, 0616), சென்னை- நாகர்கோவில் (0613, 0614, 0617, 0618), சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் (0625, 0626, 0623, 0624) ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்கள் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் நவராத்திரி பண்டிகை நாள்களான அக்டோபர் 18, 19, 20, 21 ஆகிய நாள்களில் டிக்கெட் எதுவும் காலியில்லை.
இதேபோல தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
மறுமார்க்கத்தில் சென்னை திரும்பும் ரயில்களிலும் தீபாவளி நாள் (நவ.7) தவிர வரும் நவ. 11ஆம் தேதி வரை முன்பதிவு முடிவுக்கு வந்துவிட்டது. இந்நிலையில், சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், மயிலாப்பூர், மாம்பலம், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து முன்பதிவு மையங்களிலும் பயணிகள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
முன் பதிவு மற்றும் இருக்கைகளின் நிலவரத்தை அறிய இம் மையங்களில் "கியாஸ்க்' இயந்திரங்களைப் பயன்படுத்துவதிலும் பயணிகளிடையே போட்டி நிலவுகிறது.