சென்னையில் அதிகம் கட்டணம் வசூலித்த 375 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.
சென்னை காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன், செய்தியாளர்களிடம் கூறுகையில், கிட்னி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் புகார் கொடுத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மும்பையில்தான் உள்ளனர். அறுவை சிகிச்சை நடந்த தியேட்டர் மட்டும் இங்கு உள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறையினரிடம் விபரங்கள் கேட்டிருக்கிறோம். இது தொடர்பாக எங்கள் விசாரணையும் தொடரும் என்றார்.
போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பகல் 12 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அப்பகுதியில் சரக்கு வாகனங்கள் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் கூறினார்.
அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இரு வழியாகவும் துரைசாமி சுரங்கப்பாதையில் ஒருவழியாகவும் வாகனங்கள் செல்லலாம். அதிகம் கட்டணம் வசூலித்த 375 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் காவல் ஆணையர் நாஞ்சில்குமரன்.