புதிதாக 7 லட்சம் எரிவாயு இணைப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது!
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசு இலவச எரிவாயு அடுப்பையும், எரிவாயு இணைப்பையும் வழங்கி வருகிறது.
டெல்லி சென்றுள்ள மாநில உணவுத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, நேற்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவைச் சந்தித்தார். அப்போது அவர் முதல்வர் கருணாநிதியின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் இலவச எரிவாயு இணைப்பு வழங்க புதிதாக 7 லட்சம் இணைப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அத்துடன் அமைச்சர் வேலு, எரிவாயு இணைப்புக்கு முகவர்கள் இல்லாத 69 ஊர்களில், தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மற்றும் இதர கூட்டுறவுச் சங்கங்களை முகவர்களாக நியமிக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவிடம் கேட்டு்க கொண்டார்.
இந்த வேண்டுகோளை பரிசீலிப்பதாகவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முரளி தியோரா அமைச்சர் வேலுவிடம் தெரிவித்தார்.
உணவு அமைச்சர் வேலுவுடன், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஏ. ராஜாவும் சென்றிருந்தார்.