செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால் விபச்சாரத்தில் இருந்து மீண்ட பெண், குழந்தைகள், கணவனுடன் தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு அசோகபுரம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (38). தறித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (27). சவுமியா (12), ரம்யா (10) என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் வீரப்பன்சத்திரம் அரசு பள்ளியில் படிக்கின்றனர்.
நேற்று இவர்கள் நான்கு பேரும் சாணிப்பவுடர் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காவல்துறையிடம் செல்வி அளித்த நான்கு பக்க புகார் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, அசோகபுரம், சுப்பிரமணிய வலசு பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஆறு மாதங்களுக்கு முன் வேலை பார்த்து வந்தேன். எனது ஏழ்மையை தெரிந்து கொண்ட பனியன் கம்பெனி உரிமையாளர் பாஸ்கர், தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார்.
"ஆசைக்கு இணங்கினால், குடும்பத்துக்கு தேவையானதை செய்து தருவேன்' என ஆசை வார்த்தை கூறினார். குடும்ப சூழல், பாஸ்கர் விரித்த வலைக்குள் சிக்க வைத்தது. பாஸ்கருடன் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தேன். பாஸ்கரும் பணத்தை வாரி இரைத்தார். ஒரு கட்டத்தில் தனது நண்பர்களின் ஆசைக்கு இணங்குபடி பாஸ்கர் வற்புறுத்தினார். பணம் கிடைத்தால் போதும் என்று அவர்களது வற்புறுத்தலுக்கும் சம்மதித்தேன்.
இறுதியில் முழுநேர விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டேன். சில மாதங்களுக்கு முன் விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் வழக்கில் காவல்துறையினர் ஈரோடு முழுவதும் தீவிர விபச்சார வேட்டையில் இறங்கினர். ஈரோடு விடுதியில் பாஸ்கருடன் இருந்த போது காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.
எனது கணவருக்கும் இந்த விபரம் தெரியவந்தது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் குடும்ப சூழல் காரணமாகத்தான் நான் பாஸ்கரின் ஆசைக்கு இணங்கினேன். இனிமேல் நான் அந்த பனியன் கம்பெனி வேலைக்கு செல்லவில்லை. என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எனது நிலையை விளக்கினேன்.
எனது கணவரும் பெருந்தன்மையுடன் பழசையெல்லாம் மறந்து இனியாவது ஒழுக்கமாக இரு என்று கூறி என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். கணவருடன் மீண்டும் தறி ஓட்டச் சென்றேன்.
மீண்டும் எனது வாழ்க்கையில் பாஸ்கரன் வந்து நீ என்னோடு இருந்து விடு. உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது. உனக்கு பெரிய வீடு கட்டித் தருகிறேன் என்று மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்தார். இதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டேன். பாஸ்கரின் தொல்லை அதிகரிக்கத் துவங்கியது. மாணிக்கம் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து தொந்தரவு கொடுத்து வந்தார். இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தேன்.
நேற்று முன்தினம் இரவு மாணிக்கம் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு பாஸ்கர் வந்தார். உடன் அவரது மச்சானையும் அழைத்து வந்தார். இருவரும் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர். எனது கணவர், குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்வது உனக்கு பிடிக்கவில்லையா? நான் பழைய செல்வி இல்லை. உனது எண்ணம் பலிக்காது என்று கூறினேன்.
ஆத்திரமடைந்த இருவரும் கெட்டவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். மனம் வெறுத்து போய், சாணிப் பவுடர் குடித்தேன். இதை பார்த்த எனது இரு மகள்களும் நீ மட்டும் எங்களை விட்டு போறியாம்மா? நாங்களும் உன் கூட வந்துடுறோம் எனக் கூறி சாணிப்பவுடரை குடித்தனர். வேலைக்கு சென்று வீடு திரும்பிய எனது கணவர் மாணிக்கத்திடம் நடந்த விபரத்தை கூறினோம். மாணிக்கமும் நீங்கள் மூவரும் போன பிறகு நான் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? என்று கூறி அவரும் சாணிப் பவுடர் குடித்தார்.
பாஸ்கரின் கம்பெனிக்கு புறப்பட்டுச் சென்றோம். வழியிலேயே எனது கணவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் எங்களை சேர்த்தனர். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரிக்கின்றனர்.