நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து புறப்பட்டு வந்தது. நள்ளிரவு 1 மணிக்கு இந்த பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையில் இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி நின்று கொண்டிருந்தது. அதனை பேருந்து டிரைவர் கவனிக்கவில்லை. திடீரென பஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது. நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறினார்கள்.
இந்த விபத்தில், சிவங்கை மாவட்டம் பெரியபட்டியை சேர்ந்த வள்ளியம்மாள் (55), சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி விஜயகுமார் (45), மதுரையை சேர்ந்த ஜீவரத்தினம் (20), சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த தேன்மொழி (45), சென்னை மீஞ்சூரை சேர்ந்த சோலை முத்து (45) ஆகிய பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் வேப்பூர் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சரவணாதேவி என்பவர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை நெடுஞ்சாலை ரோந்து படையினர் சரி செய்தனர்.