Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேது திட்டத்தை சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா: கருணாநிதி கே‌ள்‌வ‌ி!

சேது திட்டத்தை சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா: கருணாநிதி கே‌ள்‌வ‌ி!

Webdunia

, திங்கள், 8 அக்டோபர் 2007 (19:27 IST)
சேது திட்டத்தை சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா? கருணாநிதி கே‌ள்‌வி!

ராமர் பாலம் என்ற பெயரைச் சொல்லி செந்தமிழ் நாட்டுக்கு செழிப்பும் சிறப்பும் தரவல்ல ஒரு மாபெரும் திட்டத்தை மனம் போன போக்கில் சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா? எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கே‌ள்‌வி எழு‌ப்பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

“சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் குரல் கொடுத்தது யார்? நீயா? நானா? அவரா? இவரா? இந்தக் கட்சியா? அந்தக் கட்சியா? என்று வினாக்கணைகள் தொடுப்பதை விட, தமிழகத்திற்கு இன்றியமையாததாக நிலைபெறக் கூடிய ஒரு திட்டம் நிறைவேறுவதற்கு எல்லோரும் ஒத்துழைத்தோம் - எல்லோரும் வலியுறுத்தினோம் - என்பதில் தான் அத்திட்டத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கிறது எனலாம்.

இந்தத் திட்டத்துக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, ஒரு நீண்ட கால முயற்சிக்கான வரலாறு உண்டென்பதை நேற்றைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் ஆன்றோர்கள், சான்றோர்கள், அரசியல் தலைவர்கள் பலர், இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதில் தங்கள் ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்கள்.

குளித்தலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று 1957ஆம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவையில் அறிஞர் அண்ணா தலைமையில் அமர்ந்திருந்த நான், 1958ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, "எனக்கு முன்பு பேசிய உறுப்பினர் தூத்துக்குடி துறைமுகத்தைப்பற்றிப் பேசினார். அந்தத் துறைமுகத் திட்டத்தை எடுத்து நடத்தினால், அது கொழும்புத் துறைமுகத்துடனும், பம்பாய் துறைமுகத்துடனும் போட்டி போடக் கூடிய ஆழ்கடல் துறைமுகமாக மாறும்.

100 மைல் அளவுக்கு ஒரு கால்வாய் அமைத்தால், அந்தத் துறைமுகத்தை நல்ல முறையில் உருவாக்க முடியும். இலங்கையில் மேற்குக் கடற்கரைக்கும், இங்குள்ள தென்கோடி கீழ்க் கடற்கரைக்கும் இடையே உள்ள பாறைகளை அகற்றினால் இன்னும் பல நல்ல துறைமுகங்களை அமைக்கலாம்.

ராமசாமி முதலியார் தலைமையில் ஒரு குழு இந்தச் சேது சமுத்திரத் திட்டத்தைப் பரிசீலனை செய்து, ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்து, அது மத்திய சர்க்காருக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையும் இன்னும் கவனிக்கப்படாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கேட்கிறேன்'' என்று குறிப்பிட்டது அவை நடவடிக்கை குறிப்பில் இடம் பெற்றுள்ளது. 1971ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்ட மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டு 52 கோடி ரூபாய் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

1974ஆம் ஆண்டு மீண்டும் அது மறு ஆய்வு செய்யப்பட்டு 72 கோடி ரூபாய் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக சேதுத் திட்டத்துக்கு சாத்தியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்ததால், தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் ஜேம்ஸ் ஐசக் கோயில் பிள்ளை என்பவர் சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் பயன் உள்ளதாக அமையும் என்ற ரீதியில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓர் அறிக்கையைத் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார்.

10-5-1986 அன்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 15-9-1998 அன்று வைகோ நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சென்னையில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பாய் சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் அரசு நிறைவேற்றும் என்று அறிவித்தார்.

நான் கூறியுள்ள இந்தக் காலக்கட்டங்களில் "ஆடம்ஸ் பாலம்'' என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர "ராமர் பாலம்'' என்று எந்தக் குறிப்பும் கிடையாது. மேலும் அந்த "ஆடம்ஸ் பாலத்தை'' அகற்றி விட்டு சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தான் வலியுறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, புதிய பிரச்சினை எதுவும் எழுப்பப்படவில்லை. அப்படி எழுப்பப்பட்டாலும் அதைப் பொருள்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்கு அ.தி.மு.க. 2001ஆம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையைப் படித்துப்பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

ராமர் பாலம் பகுதியில் அங்கேயுள்ள மணல் மேடுகளை அகற்றி விட்டு சேது சமுத்திரத் திட்டம் அமைக்க வேண்டுமென்று தேர்தல் அறிக்கையில் கூறிய ஜெயலலிதா, தற்போது 1-10-2007 அன்று வெளியிட்ட அறிக்கையில் ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்று கூறுகிறார் என்றால் அது பா.ஜ.க. விற்காக சொல்லப்படும் வார்த்தைகள் என்று தானே பொருள்.

இவ்வளவு விவரங்களையும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையிலே எழுதி விட்டு, தற்போது அதனால் யாருக்கும் பலன் இல்லை என்று அறிக்கை விடுகிறார் என்றால் மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சியில் இருக்கும் போது சேது சமுத்திரத் திட்டம் வரக்கூடாது என்ற ஒரே எண்ணம் தான் இவருக்கு இருக்கிறது என்பதை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்ளாமலா போய் விடுவார்கள். இந்தச் சேதுக்கால்வாய் திட்டத்தை இப்போது கேள்விக் குறியாக ஆக்கி யிருப்பது ராமர் பாலம் பிரச்சினை தான்.

2005ஆம் ஆண்டு ஜுலைத் திங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், சேதுக் கால்வாய் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு, அறுபது சதவிகிதப் பணிகள் முடிவுற்ற நிலையில் திடீரென்று ராமர் பாலம் என்ற பிரச்சினையைக் காட்டுகிறார்கள். கடந்த காலங்களில் இந்த ராமர் பாலம் பற்றி எந்தவொரு குறிப்பும் வெளி வந்ததில்லை என்பதையும், அப்படி ஒன்று இருந்தாலும் அதை அகற்ற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. எத்துணை அழுத்தந்திருத்தமான கருத்துக் கொண்டிருந்தது என்பதையும் அவர்களின் இந்தத் தேர்தல் அறிக்கையே திட்டவட்டமாக எடுத்துக்காட்டுகிறது.

நம்மைப் பொறுத்த வரையில் நமக்கென்று நாம் ஏற்றுக் கொண்ட பகுத்தறிவு கொள்கைகள் இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய பாரபட்சமற்ற பொது நிலையை நாம் என்றைக்கும் மறந்ததில்லை. நாம் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை எப்படி பிறர் மீது திணித்திட நாம் முனைவதில்லையோ, அது போல பிறர் பின்பற்றுகிற பழக்க வழக்கங்களை, கொள்கைக் கோட்பாடுகளை - அவை அறியாமையின் பாற்பட்டதாக இருந்தால் அவற்றை அவர்கள் நம் மீது திணிப்பதற்கும் நாம் உடன்படுவதில்லை.

ஆட்சியில் இருப்போர் கடமைகளையும், பொறுப்புக்களையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து செயல்படுவது தான் நமது பண்பாடாகும். 25 ஆண்டுக் காலமாக ஓடாமல் கிடந்த திருவாரூர் ஆழித் தேரை ஓட்டியது தி.மு.க. ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்த போது தான்.

எந்தவொரு ஆலயத்திலும் அவற்றின் பரம்பரை திருவிழாக்களுக்கோ, தீர்த்த மாடுதல் போன்ற வைபவங்களுக்கோ இந்த ஆட்சியில் தடை இல்லை. அண்மையில் தான் விநாயகச் சதுர்த்தி தமிழகம் முழுவதும் மிகத் தடபுடலாக நடைபெற்றிருக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.

2006ஆம் ஆண்டு மே திங்களில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் தமிழகத்தில் 1493 கோவில்களுக்குத் திருப்பணி நிறைவுபெற்று குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. மேலும் 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட 253 திருக்கோவில்களில் திருப்பணியும் மேம்பாட்டுப் பணிகளும் செய்ய ஆணை பிறப்பித்து அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 20 கோவில்களுக்கு தங்கத் தேர் செய்ய முடிவு செய்து, அவற்றில் 7 தேர்கள் முடிவுற்ற நிலையிலும், மீதமுள்ள 13 தேர்கள் செய்யப்பட்டு வருகின்ற நிலை யிலும் உள்ளன.

சேதுக் கால்வாய் திட்டத்திற்கே கூட ஆரம்பக் காலத்தில் இருந்தே ஆடம்ஸ் பாலம் என்பதற்குப் பதிலாக ராமர் கால்வாய் திட்டம் என்றே பெயர் இருந்திருக்குமேயானால், அந்தப் பெயர் கூடாது என்று நாம் கூறப் போவதில்லை. ஏனென்றால் "ராமேஸ்வரம்'', "ராமநாதபுரம்'' என்ற பெயர்கள் இன்றைக்கும் இருக்கின்றன. வேதாரண்யம் கோடியக்கரையில் ஒரு மேட்டின் மீது கல்லில் செதுக்கப்பட்ட ராமர் பாதமே இருக்கிறது. ராமன் அங்கு நின்று கொண்டு தான் இலங்கையை தொலை நோக்கில் கண்டான் என்கிறார்கள். அதற்கு எந்த சேதாரமும் யாரும் விளைவிக்கவில்லை, இந்த ஆட்சிகளில்.

தற்போது கிருஷ்ணா நதி, சண்முகா நதி, பிரம்மபுத்ரா நதி போன்றவைகளில் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றனவே, இந்த நதிகள் கடவுள் பெயரால் உள்ளன என்பதற்காக அந்தத் திட்டத்தை யாராவது எதிர்க்கிறார்களா.. கிடையாதே! கிருஷ்ணா நதியிலிருந்து தானே சென்னைக்கே குடிநீர் வருகிறது. அது கடவுள் பெயரில் உள்ள நதி, அது வேண்டாமென்றா சொல்லுகிறோம்? எனவே இப்போது பிரச்சினை என்னவென்றால் ராமர் பாலம் என்ற பெயரைச் சொல்லி செந்தமிழ் நாட்டுக்கு செழிப்பும் சிறப்பும் தரவல்ல ஒரு மாபெரும் திட்டத்தை மனம் போன போக்கில் சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா என்று கேட்பது தான்!

Share this Story:

Follow Webdunia tamil