மக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காவல்துறை மாற வேண்டும்-நட்ராஜ்
-நமது திருச்சி செய்தியாளர்
மக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காவல்துறை மாற வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஆர். நட்ராஜ் கூறினார்.
திருச்சியில் காவல்துறை அலுவலர்களுக்கான மனித உரிமை பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு நடைபெற்றது.
இதில் பேசிய நட்ராஜ், நாட்டில் ஆங்காங்கு நடைபெறும் ஓரிரு செயல்கள், ஒட்டுமொத்த காவல்துறைக்கு தலை குனிவை ஏற்படுத்துகின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்க காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டும்.
காவல்நிலையச் சாவுகள் மிகப்பெரிய அவமானத்தைத் தருகின்றன. இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
வழக்கை முழுமையாக விசாரிக்காமல் விடுதலும், கண்ணிய குறைவாக வார்த்தைகளை பயன்படுத்துதலும் மனித உரிமை மீறலாகும். மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அணுசரனையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் நட்ரர் பேசினார்.
மகளிருக்கு தனிக்கிளை தொடங்க கனரா வங்கி திட்டம்
-நமது திருச்சி செய்தியாளர்
மகளிருக்கு தனிக்கிளை தொடங்க கனரா வங்கி திட்டமிட்டுள்ளதாக கனரா வங்கி வட்ட அலுவலக துணைப் பொது மேலாளர் ம.நாகராஜன் தெரிவித்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மையம், கனரா விங்கியுடன் இணைந்து சுய உதவிக்குழு, மகளிர் தொழில் முனைவோர் தயாரிக்கும் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
டாக்டர் மணிமேகலை வரவேற்றார். கனரா வங்கி வட்ட அலுவலக துணைப் பொது மேலாளர் ம.நாகராஜன் சிறப்புரையாற்றும்போது, திருச்சியில் மகளிருக்காக தனிக்கிளை தொடங்கப்படும் என்றும் இதுவரை திருச்சி பகுதியில் 1000 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.