சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் காட்டு எருமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருக்கும் உணவுகளை உட்கொண்டுவிட்டு வனப்பகுதிக்குள் இருக்கும் குளம், குட்டைகளில் தண்ணீர் குடித்துவிட்டு வாழ்ந்து வருகிறது.சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக காணப்பட்டது. குறிப்பாக பண்ணாரியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள வனக்குட்டையில் நாள்தோறும் சுமார் 50 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தண்ணீர் குடித்து சென்றதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.இதேபோல் ஆசனூர் பகுதியிலும், கடம்பூர் பகுதியிலும் காட்டுயானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக சாலைகளை கடந்து சென்றதையும் காணமுடிந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக காட்டுயானைகள் முதுமலை பகுதிக்கு இடம் மாறியுள்ளது. நவம்பவர் மாதத்தில் மீண்டும் இடம்பெயர்ந்த காட்டு யானைகள் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு வந்துவிடும் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
இந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் கொண்டை ஊசி வளைவிலும், பண்ணாரி பகுதியிலும் காட்டெருமைகள் சாதாரணமாக சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு புல்மேய்ந்து வருவதை தற்போது காணமுடிகிறது.
திம்பம் இன்ஜினியர் சாலை மற்றும் தலைமலை சாலை பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக காணப்படுகிறது.