ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை சாலை ஓரமாக நின்று கரும்பு லாரிக்காக காத்திருப்பது இப்பகுதியில் தினம், தினம் நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்த யானையை வனத்துறையினர் கரும்பு லாரி வைத்தே இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளில் அழைத்து சென்று தலைமலை வனப்பகுதியில் சுமார் 20 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் விட்டு வந்தனர்.இதனால் இந்த யானை தொந்தரவு இருக்காது என கரும்பு லாரி ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அடுத்த நாளே கொண்டை ஊசி வளைவு இரண்டில் நின்றுகொண்டு மீண்டும் கரும்பு லாரிகளை தடுக்கும் பணியை மேற்கொண்டதால் வனத்துறையினர் விரக்தியடைந்தனர்.பின் பட்டாசு உள்ளிட்டவைகளை கொண்டு வனத்திற்குள் விரட்டினர். இதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் கரும்பு லாரிகள் நிறுத்தப்பட்டது. இதனால் ஓரிரு நாட்கள் காத்திருக்கும் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என எண்ணினர்.
ஆனால் ஒருவாரம் கரும்பு லாரிகள் வராத நிலையில் நாள்தோறும் கரும்பு யானை பண்ணாரி ரோட்டில் நிற்பது தவறாமல் நடந்துவந்தது. நேற்று சாலை ஓரத்தில் நின்ற யானை வாகனங்கள் வரும்போது அவைகளை விரட்டுவதும் வராதபோது சாலை ஓரத்தில் நிற்கும் மரங்களின் கிளைகளை ஒடித்து திண்ணுவதுமாக இருந்தது.
இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு வனத்துறையினருக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் பயிற்சி யானை அதாவது "கும்கி' யானை இரண்டை பண்ணாரி பகுதிக்கு அழைத்து வந்து, "கும்கி' யானைகளின் உதவியால் அடர்ந்த வனப்பகுதியில் கரும்பு யானையை விரட்ட வனத்துறையினர் யோசித்து வருகின்றனர்.
இது மக்கனா என்ற வகை யானையாகும். கொம்பு இல்லாத ஆண் யானையை மக்கனா என்று அழைப்பார்கள். இந்த யானைக்கு சுமார் 15 வயது இருக்கும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.