மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் கடன் தர வங்கிகள் முன் வர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கிளையை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்து பேசுகையில், போட்டி இருந்தால்தான் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் துறை நிறுவனங்களுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என்றார்.
இந்தியாவில் முதலிடம் வகிக்கும் 4 வங்கிகளில் பேங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. இந்த வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.2,25,000 கோடிக்கும் மேல். தொண்டியில் திறக்கப்பட்டிருப்பது இந்த வங்கியில் நீங்கள் நம்பிக்கையுடன் பணம் போடலாம், எடுக்கலாம், கடனும் கேட்கலாம். வியாபாரிகள், மகளிர் குழுவினர், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் கடன் தர வங்கிகள் முன்வர வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி கடன் பெறும் மாணவர்கள் நல்ல கல்வியறிவு பெற வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருப்பதால் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு உறுதியாகி உள்ளது என அமைச்சர் சிதம்பரம் கூறினார்.