Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேது திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்-கருணாநிதி

சேது திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்-கருணாநிதி

Webdunia

, ஞாயிறு, 7 அக்டோபர் 2007 (15:17 IST)
சேது சமுத்திரத் திட்டம் எப்படியாவது நடை முறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர, நுனிப்புல் மேய்வதைப் போல எதற்கெடுத்தாலும் சவால் விடுவதை நிறுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என வைகோவை கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

சேது சமுத்திர திட்டத்திற்காக கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாக கோரிக்கை வைத்ததை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன் என்று வைகோ கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் கருணாநிதி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், வைகோவின் சவால் படலம் தொடருவதால், நான் சேது சமுத்திரத் திட்டத்திற்காக பிரதமருக்கு எழுதிய ஒரு கடிதத்தை மட்டுமல்ல, இரண்டு கடிதங்களை ஆதாரத்துடன் இங்கே வெளியிடுகிறேன்.

இதன் பின்னராவது, சேது சமுத்திரத் திட்டம் எப்படியாவது நடை முறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர, நுனிப்புல் மேய்வதைப் போல எதற்கெடுத்தாலும் சவால் விடுவதை நிறுத்திக் கொள்ள முன் வர வேண்டுமெனக் கோருகிறேன்.

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி 8.5.2002 அன்று அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு நான் எழுதிய கடிதத்தின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. 8.5.2002 அன்று நான் பிரதமருக்கு எழுதிய அந்தக் கடிதம் மொழியாக்கம் செய்யப்பட்டு எல்லா ஏடுகளிலும் 9.5.2002 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தின் சுருக்கமாக, "அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, வணக்கம். தமிழகத்தின் நீண்நாள் கோரிக்கையான சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன். தி.மு.க. இத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக வலியுறுத்தி வருகிறது. நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக் குறித்து வலியுறுத்தி உள்ளேன்.


தி.மு.க. 23.7.67 சேது சமுத்திரத்தின் ஒரு பிரிவாக உள்ள தூத்துக்குடி திட்டம், சேலம் இரும்பாலைத் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கோரி முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் "எழுச்சி நாளை'' அறிவித்தார்.

இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும் இத்திட்டம் நீண்டநாளாக கிடப்பில் போடப்பட்டது என்பது கவலைக்குரிய செய்தியாகும்.

மத்தியில் ஆளும் நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இத்திட்டத்தை நிறைவேற்றிடவும், இத்திட்டத்தின் சாத்திய கூறினை ஆராய பண ஒதுக்கீடு செய்தது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆனால் இந்த சேது கால்வாய் திட்டம் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இக்கடிதம் மூலமாக தங்களை வலியுறுத்துகிறேன்.

பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்புகள் வழங்கிடும் இத்திட்டத்தை நாட்டு வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் தலையிட்டு தாமதமில்லாமல் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒரு கடிதம் மாத்திரமல்ல; 15.10.2002 அன்று மீண்டும் பிரதமர் அவர்களுக்கு மே 8-ந்தேதி எழுதிய கடிதத்தை நினைவூட்டி, அந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறேன்.

இதன் பின்னராவது உண்மை என்ன, பொய் என்ன என்பதை சவால் விட்ட நண்பரும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போரும் நடுநிலையாளர்களும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தச் சேதசமுத்திரத் திட்டம் பற்றியும், அதிலே எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து எழுதவிருக்கிறேன் என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



Share this Story:

Follow Webdunia tamil