ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கான நிலையான பயணப்படியை உயர்த்தி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அந்தந்த மாவட்டங்களுக்குள் பயணம் செய்வதற்காக, ஊராட்சித் தலைவருக்கு ரூ.300, ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு ரூ.500, ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு ரூ.200, மாவட்ட ஊராட்சித் தலைவருக்குஆயிரம் ரூபாய், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு ரூ.300 என்று அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. பின்னர் இந்தத் தொகையில் 10 சதவீதம் உயர்த்தப்பட்டு, முறையே ரூ.330, ரூ.550, ரூ.220, ரூ.1,100, ரூ.330-ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் தொகையில் 1999-ம் ஆண்டில் இருந்து எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என்றும் இந்த மூன்றடுக்கு ஊராட்சித் தலைவர்களின் பணி பல காரணங்களால் அதிகரித்து இருப்பதால், அவர்களது நிலையான படியை உயர்த்தலாம் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்குனர் பரிந்துரை செய்தார்.
மேலும் விலைவாசி காரணமாக பயணச் செலவு மற்றும் அதனோடு தொடர்புடைய செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே இவர்களின் படியை உயர்த்தலாம் என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் கூறி இருந்தார்.
அதைத் தொடர்ந்து அரசு பரிசீலனை செய்து, அவர்களுக்கான மாதாந்திர நிலையான பயணப்படியை திருத்தி ஆணை பிறப்பிக்கப்படுகிறது. கிராம ஊராட்சித் தலைவர் ரூ.500, ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரூ.750, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூ.400, மாவட்ட ஊராட்சித் தலைவர் ரூ.1,500, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ.500 என்று பயணப்படி உயர்த்தப்பட்டு உள்ளது.