சேலம் ரயில்வே கோட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்ற மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள தமிழகத்தின் பகுதிகளைப் பிரித்து சேலம் இரயில்வே கோட்டத்தை உருவாக்கும் முயற்சி பல்வேறு தடைகளைத் தாண்டி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கோட்டத்தை வருகிற நவம்பர் 1ஆம் தேதி மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடங்கி வைப்பார் என்று மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டத்தின் அலுவலகம் இப்போதுள்ள ஊழியர் குடியிருப்பிலேயே செயல்படும் என்றும், புதிய கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நவம்பர் 1ஆம் தேதியே நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சேலம் -விருத்தாசலம் இடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல இரயில்பாதையும் அன்றே தொடங்கி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசியில் பேட்டியளித்த மத்திய ரயில்வேதுறை இணையமைச்சர் ஆர்.வேலு கூறியதாவது:
சேலம் கோட்டத்திற்கான எல்லாப் பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. அங்கு பணியாற்ற வேண்டிய எல்லாப் பணியாளர்களுக்கும் பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.
சேலம் கோட்டத்தின் கீழ் வரும் மொத்த தூரம் 862 கிலோமீட்டர் ஆகும். நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் விழாவில் மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் தலைமையில் தமிழக முதல்வர் கருணாநிதி சேலம் கோட்டத்தைத் தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அமைச்சர் வேலு தெரிவித்தார்.