தமிழ்நாட்டில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்றவும், பாதுகாக்கவும், 'தமிழக குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் சட்டம்' என்ற பெயரில் தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது
தமிழகத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் 10 ஆயிரத்து 540 குளங்களும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 28 ஆயிரத்து 662 குளங்களும் உள்ளன. இவற்றில் சில குளங்கள் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இவற்றை அரசு அகற்ற முயலும்போது, அதனை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுவிடுன்றனர்.
இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்றவும், பாதுகாக்கவும், 'தமிழக குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் சட்டம்' என்ற பெயரில் தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்த சட்ட விதிகளில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள குளங்களை முழுமையாக அளந்து, அவற்றின் எல்லைகளை குறியீடு செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டங்கள், தாலுகாக்களில் உள்ள வருவாய் துறையின் உண்மையான (ஒரிஜினல்) ஆவணங்களை எடுத்து அதில் உள்ள விவரங்கள் அடிப்படையில் குளங்களை அளந்து குறியிட வேண்டும். அவ்வாறு குறியிடப்படும் எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள், கட்டடங்கள், மக்களுக்காக அரசு பிரித்துக் கொடுத்துள்ள பகுதிகள் ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும். அதையடுத்து ஒவ்வொரு குளத்தின் வரைபடம் மற்றும் ஆவணங்கள் தயாரிக்க வேண்டும்.
தாலுகா நில அளவையாளர் (சர்வேயர்) அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறையின் உதவி இயக்குனர் நியமனம் செய்ய வேண்டும். நில அளவையாளர் மேற்பார்வையில் உள்ளூரில் உள்ள குளங்களை சர்வே செய்ய உத்தரவிட வேண்டும். குளங்களை அளந்து குறியீடு செய்யும் பணியை நில அளவையாளர் மேற்கொள்ளும்போது பொதுப் பணித்துறை அதிகாரிகள் தேவையான விவரங்களை கொடுப்பதுடன் முழு ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும்.
குளத்தின் எல்லை வரையறுக்கப்பட்டதும் எல்லை கற்களை நிரந்தரமாக வைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதிக்குள் வெளியாட்களின் தலையீடு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குளங்கள் அளக்கப்பட்டு வரைபடம் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் அதனை அந்தந்த தாசில்தாரிடம் அளித்து ஒப்புதல் பெற வேண்டும். பின்னர், அதனை சம்பந்தப்பட்ட பொதுப் பணித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
வரைபடம் மற்றும் ஆவணங்கள் பெறப்பட்ட ஒருமாத காலத்திற்குள் கிராம நிர்வாக அலுவலகம் (வி.ஏ.ஓ), கிராம பஞ்சாயத்து அலுவலகம், நீர்வள ஆதார அமைப்பு அலுவலகம் ஆகியவற்றின் அறிவிப்புப் பலகைகளில் வரைபடத்தை வெளியிட பொதுப் பணித்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரைபடத்தின்படி குளத்தில் ஏதாவது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதனை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு பொதுப் பணித்துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பாளர் அல்லது அவரது குடும்பத்தினர் அல்லது அவர்களால் அனுமதிக்கப்பட்ட ஏஜெண்ட்டிடம் நோட்டீஸை கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர் கடைசியாக வசித்த முகவரி அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் நோட்டீஸ் ஒட்டலாம்.
அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஆக்கிரமிப்பு பணியை மேற்கொள்ளும்போது பாதுகாப்பிற்காக போதிய போலீசாரை அனுப்பி வைக்கும்படி அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக கொடுத்து கேட்கலாம்.
அதன்பிறகு ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடம், தடைகள், வளர்க்கப்பட்ட பயிர் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான செலவுத் தொகையை ஆக்கிரமிப்பாளர் மீதே விதிக்க வேண்டும். இந்த தொகையை செலுத்தாவிட்டால், அதனை பெற்றுத் தரும்படி அந்தந்த பகுதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கலாம்.